இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு

டெல்லி: இந்திய ராணுவ படைகளை வழிநடத்திச் செல்வதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு முழுமையான பணிச் சேவை வழங்குவது தொடர்பான வழக்கில், ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் தலைமை பதவிகள் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‌அதற்கு, ஆண்களின் உடல் வலிமைக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து நீதிபதி அமர்வு கூறியதாவது: பெண் ராணுவ அதிகாரிகளுக்கான நிரந்தர பணியிடங்களை மூன்று மாதங்களில் வழங்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராணுவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் விதிமுறை ஒன்றுதான் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் மனநிலை மாறவேண்டும் என கருத்து தெரிவித்தனர். இந்திய ராணுவத்தில் தலைமை பதவிகள் சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பெண் ராணுவ ‌அதிகாரிகளுக்கு நிரந்தர பணியிடம் வழங்காதது மத்திய அரசின் பாரபட்சமான செயல்பாடு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: பெண் அதிகாரிகள் ஆயுதப் படையில் நிரந்தரமாக பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். கடந்த 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்கள் படைகளை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு ஆயுதப்படையில் அவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார்” என அவர் பதிவிட்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் 1,500 பெண் அதிகாரிகள் பயன் அடைவார்கள் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: