மத்திய அரசின் நிதி பகிர்வு குறைந்ததே தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறைக்கு காரணம்: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை: மத்திய அரசின் நிதி பகிர்வு குறைந்ததே தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை மத்திய தொகுதி பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் (திமுக) பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தில் வருவாயின் சதவீதம் அபாயகரமான அளவிற்கு குறைந்துள்ளது. 2006 திமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி 14.34 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 2016க்கு பிறகு 10.37 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2014ல் 1,788 கோடி, 2015ல் 6,407 கோடி, 2016ல் 11,985 கோடி, 2018ல் 21,594 கோடி, 2019ல் 23,459 கோடி, 2020ல் 25,072 கோடி, 2021ல் 21,618 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி கணக்கில் நமது வருவாய் பற்றாக்குறை என்பது அதிகமாகதான் இருந்துள்ளது. கடந்த 2019ல் 34 சதவீதம் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை கடந்த 2018ல் 21,594 கோடி, கடந்த 2019ல் 23,459 கோடியாக இருந்தது. 14வது நிதிக்குழுமத்தின் பரிந்துரையில்தான் தமிழகத்துக்கு நிதி பகிர்வு சரிந்துள்ளது. தமிழக அரசின் தற்போதைய நிதிநிலைக்கு முக்கிய காரணம் மத்திய அரசு நிதி பகிர்வு குறைந்தது தான். கடந்த 2015-16ல் 4,786 கோடி, கடந்த 2016-17ல் 5,770 கோடி, கடந்த 2017-18ல் 6,378 கோடி, கடந்த 2018-19ல் 7,239, கடந்த 2019-20ல் 7655 கோடி நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் 60 சதவீதம் நிதி தருவதை குறைத்து விட்டது. இதனால், பல்வேறு திட்டத்துக்கு கூடுதலாக 3,500 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ல் உதய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேர்ந்ததன் விளைவாக 22,815 கோடி கடனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த 2017 முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி மூலம் வரி வருவாய் தமிழகத்துக்கு வர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 3794 கோடியும், நிலுவை தொகை 4073 கோடியும் தர வேண்டியுள்ளது. 15வது நிதிக்குழுமம் பரிந்துரையில் தமிழகத்துக்கு 42 சதவீதமாக இருந்த நிதி பங்கு, 41 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு தரும் பங்கு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தமிழக அரசு அழுத்தம் காரணமாக பங்கு குறைப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பொருளாதாரம் நல்ல சூழ்நிலையை நோக்கி கொண்டிருக்கிறது. எனவே, தமிழக அரசு வருவாய் பற்றாக்குறை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடந்த 2020-21ல் 16,893 கோடியில், 2022-2023ல் 10,930 கோடியாக குறைய வாய்ப்புள்ளது. செலவினங்களை கட்டுக்குள் வைக்க ஆதிசேஷய்யா கமிட்டி அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையின்படி பல்வேறு திருத்தங்கள் செய்து செலவினங்களை குறைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: