சிஏஏ குறித்த திமுகவின் கோரிக்கையை விவாதிக்காமலேயே நிராகரித்த சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சிஏஏ குறித்த திமுகவின் கோரிக்கையை விதிமுறைக்கு முரணாக விவாதிக்காமலேயே சபாநாயகர் நிராகரித்தார் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிஏஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது, வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நிகழ்ந்த அராஜகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் திருப்தி அளிக்காதது இரண்டையும் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று அடையாள வெளிநடப்பு செய்தனர். அப்போது பேரவை வளாகத்தில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: சிஏஏ.வுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தீர்களே?

மு.க.ஸ்டாலின் :கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்திருந்தேன். கடந்த கூட்டத்தொடரின் போது ஒவ்வொரு நாளும் கேட்டதற்கு, ஆய்வில் இருக்கிறது என்றே சபாநாயகர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். நிராகரிக்கவில்லை. தற்போது கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே சபாநாயகர் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, அது என்னவாயிற்று என்று கேட்டோம்.  அதுமட்டுமின்றி, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அங்கிருக்கும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி, ஒரு பெரிய அக்கிரமத்தை, அராஜகத்தைச் செய்திருக்கிறார்கள்.

அங்கே அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதனால் பலர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் காவல் ஆணையர் பேசி இருக்கிறார். பேச்சுவார்த்தையால் என்ன பயன் கிடைத்தது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் அவர்களிடம் பேச்சு நடத்தியதாக செய்தியைப் பார்த்தோம். முதலமைச்சர் கூட அவர்களை அழைத்துப் பேசியதாகச் செய்தியைப் பார்த்தோம். அதுபற்றி எல்லாம் எந்த விளக்கத்தையும் இந்த சபையில் அவர்கள் அளிக்கவில்லை. சிஏஏ.வுக்கு எதிராகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற  திமுகவின் கோரிக்கை குறித்து “ஏற்கனவே நீங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வைத்த கோரிக்கையை நான் நிராகரித்து விட்டால் அதை மீண்டும் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கக்கூடாது” என விதிமுறைக்கு ஒரு தவறான விளக்கத்தைக் கூறி சபாநாயகர் பதில் சொன்னார். அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அது ஆய்வில் இருக்கிறது என்றுதான் சபாநாயகர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். சட்டமன்ற விதி 174ல் தெளிவாக இருக்கிறது.

தனித் தீர்மானம் ஒன்று அரசுக்குச் செய்யப்படும் பரிந்துரை வடிவிலோ, பேரவையின் கருத்தை அறிவிக்கும் முறையிலோ, எக்காரணத்திற்கேனும் பேரவையின் குழு ஒன்றை நியமிப்பதற்குக் கொண்டுவரப்படும் தீர்மான வடிவிலோ அல்லது அத்தனித் தீர்மானத்தின் பொருளுக்கேற்ப வேறு எந்த வடிவிலோ இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து மீண்டும் விவாதம் எழுப்புவதாக அமையக்கூடாது என்பதுதான் அந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் விவாதிக்க முடியாது என்று எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கிறாரே? மு.க.ஸ்டாலின்: பதில் வேறு, விவாதிப்பது வேறு. விவாதிக்கவில்லை. விவாதித்து மறுத்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்போம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்தான் விவாதிக்கவில்லை எனச் சொல்கிறார்களே?

மு.க.ஸ்டாலின் :  ஜல்லிக்கட்டு வழக்கு கூடத்தான் நீதிமன்றத்தில் இருந்தபோது விவாதம் நடைபெற்றது. விவாதம் மட்டுமின்றி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினோம்.  வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தூண்டிவிட்டதால் தடியடி நடத்தியதாகக் கூறுகிறார்கள். பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மு.க.ஸ்டாலின்: அது வேண்டும் என்றே திட்டமிட்டு, ஆளுங்கட்சி செய்யக்கூடிய விஷமப் பிரசாரம். என்சிஆர், என்.பி.ஆர் குறித்து என்ன பதில் சொன்னார்கள்? மு.க.ஸ்டாலின்: அதற்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. சபாநாயகரும் எங்களது தனித் தீர்மானத்தை ஏற்பதாக இல்லை. இவற்றையெல்லாம் கண்டிக்கும் வகையில் திமுக சார்பில் அடையாள வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: