வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியது ஏன்? முதல்வர் விளக்கம்

சென்னை: வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் நேற்று விளக்கம் அளித்தார்.  அவர்  பேசியதாவது: கடந்த 14ம்தேதி மதியம் 1.30 மணியளவில், சுமார் 200 பெண்கள் உட்பட 300 இஸ்லாமியர்கள், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணன் ரவுண்டானா அருகில் குழுமி, இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.  அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என  காவல் துறையினர் அறிவுறுத்தலையும் மீறி மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 40 ஆண்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.  காவல் துறையினர் அவர்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர்.  பேருந்துக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கண்ணன் ரவுண்டா அருகில், இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் அனுமதியில்லாமல் அதிகளவில் கூடி கோஷமிட்டவாறு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக செயல்பட்டனர்.  

காவல் துறையினரை நோக்கி போராட்டத்தினர், தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் ஆகியவற்றை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.  இக்கலவரத்தில், ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார்,  பெண் காவலர்கள் உதயகுமாரி, கலா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து போராடியதால்,  தடுப்புகள் அமைத்து, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அரணாக இருந்தனர். சிறிது நேரத்தில், வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், அப்பகுதி மக்களை தூண்டி விட்டு காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு, காவல் துறையினரை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு, சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய முற்பட்ட காவல் துறையினர் மீது கற்கள், பாட்டில் மற்றும் செருப்புகளை வீசினார்கள். இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 82 பேரை கைது செய்து, அரசு பேருந்தில் ஏற்றியபோது, பேருந்தில் ஏறியவர்கள், பேருந்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு, அப்பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆறு தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த 70 வயது நிரம்பிய பசுருல்லா என்பவர்  நோயின் காரணமாக  இயற்கையாக மரணமடைந்ததார்.  ஆனால், அவர் காவல் துறையினரின்  தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டது.   இதுசம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்  இரவு 9.30  மணி முதல்  இஸ்லாமிய அமைப்பு  தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து  செல்ல உடன்பாடு  ஏற்பட்டு, கைது  செய்யப்பட்டவர்கள்  விடுவிக்கப்பட்டனர்.   ஆனால்,   ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல்   தொடர்ந்து   கோஷமிட்டவாறு   இரவு   முழுவதும்  போராட்டம் நடத்தினர்.  15ம்தேதி அன்று முழுவதும், கண்ணன் ரவுன்டானாவில், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பெண்களும், ஆண்களும் அந்த ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்  மீண்டும் 15ம்தேதி இரவு 8.30 மணியளவில் மீண்டும்  இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் பேசினார். வண்ணாரப்பேட்டை அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் லத்தீப் தலைமையில் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கின்றார்கள். அதேபோல, 16ம்தேதி இரவு என்னுடைய இல்லத்திலே எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் அக்கட்சியிலே இடம் பெற்றிருக்கின்ற பல்வேறு நிர்வாகிகள் என்னை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்திருக்கின்றார்கள். இன்று(17ம்தேதி) காலை 9 மணியளவில் அந்த இடத்தில் சுமார் 75 பெண்கள் உட்பட 150 நபர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மையின சகோதர, சகோதரிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் இந்த அரசு அனுமதிக்காது, இந்த அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: