டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு அழியும் மை பேனாவை தயாரித்துபல லட்சங்களை அள்ளியவர் அதிரடி கைது: மீண்டும் ஜெயகுமாரை 10 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4 மற்றும் குரூப்2ஏ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற அழியும் மை கொண்ட பேனாக்களை தயாரித்து கொடுத்த அசோக் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை மீண்டும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளிகளான டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம் காந்தன், உதவி ஆய்வாளர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதி பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வந்த அரசு ஊழியர்கள் உட்பட 46 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு முறைகேட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நபர்களின் விடைத்தாள்களை திருத்த அதற்கான விடைகளை குறித்து கொடுத்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆசிரியர் செல்வேந்திரன்(45) மற்றும் ஜெயகுமாரிடம் 12 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன்(25) என்பவர் கடந்த 14ம் தேதி ஜார்ஜ் டவுன் மற்றும் சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இதற்கிடையே ஜெயகுமார் கொடுத்த தகவலின்படி ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நபர்களுக்கு எளிதில் அழியக்கூடிய மை கொண்ட பேனாவை தயாரித்து கொடுத்த புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.

ஆனால் அவர் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வந்தார். பின்னர் செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு அசோக்கை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்த குரூப்4 மற்றும் குரூப்2ஏ தேர்வுக்கு விடைகளை தொகுத்து கொடுத்த ஆசிரியர் செல்வேந்திரன் மற்றும் தேர்வு எழுதிய பிரபாகரன் ஆகியோரை 7 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு ெசய்துள்ளனர். அதேபோல், 7 நாள் காவல் முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை புழல் சிறையில் அடைக்கப்பட்ட  முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரை மீண்டும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 12 பேரிடம் விசாரணை

2011ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது. அந்த தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் பணியில் சேர்ந்த 117 பேரில் 60  க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த  புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த 12 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் யாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர், இதையடுத்து சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜாரானார்கள்.

Related Stories: