×

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு(என்.பி.ஆர்) எதிராக தமிழகத்தில் மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   n குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆரையும், ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி,  மாபெரும்  கையெழுத்து  இயக்கம் நடத்தி 2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை தமிழக மக்களிடம் பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெற வைத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசையும், பிற்போக்கான இந்த சட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த அதிமுக, பா.ம.க. போன்ற கட்சிகளையும் பெரிதும் மிரள வைத்துள்ளது. ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கும்  போராட்டத்தை காணச் சகிக்காத அதிமுக அரசு காவல்துறையை ஏவி விட்டு சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்தியிருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.  சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பிரச்சினை எழுப்பி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த நியாயமான கோரிக்கையை சர்வாதிகாரத்தனத்துடன் ஏற்க மறுத்ததோடு, குடியுரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமிக்கு இந்தக் கூட்டம்  கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

காயம்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு விரைந்து முழுமையான  குணமடைய வேண்டும் என்று விரும்புகிறது. அதேநேரத்தில்,  அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பளிக்காமல் என்.ஆர்.சிக்கு வழி திறக்கும்  என்.பி.ஆரை தமிழகத்தில் நடத்தத் தன்னிச்சையாக அனுமதித்தால், அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, என்.பி.ஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி,  அறிஞர் அண்ணா காட்டிய காந்திய அற வழியில், மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை, திமுக நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிடும்  என்றும் இந்தக் கூட்டம் எச்சரிக்கை செய்ய  விரும்புகிறது.  “குரூப்-4 தேர்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மூலம், 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றாலும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முதலைகள் இதுவரை பிடிபடவில்லை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றிற்கான  8,888 பதவிகளை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்றவர்களில்  10 சதவீத விளையாட்டு சிறப்புக் கோட்டாவில் சேருவதற்கு சான்றிதழ் கொடுத்தவர்களில் 1,000 பேருடைய சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2016ல் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 64 பேர் வெற்றி பெற்றதும் இந்த மெகா ஊழல் குறித்து உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் விசாரணையில் மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி வழக்கை பிசுபிசுக்க வைத்ததையும் இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில், குறிப்பாக 2016 முதல் இன்றுவரை நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை உச்சநீதிமன்ற  நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரித்திட வேண்டும்.

nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதீர்கள்’  என்று, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரகசியமாகக் கடிதம் எழுதி, கடந்த காலத்தை மறைத்து எதிர்காலத்தை நினைத்து, மண்டியிட்டுக்  கெஞ்சி நிற்பதற்கு, மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்று மாலைக்குள் கடிதத்தை வெளியிடவில்லை என்றால் அதை நானே வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கடும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அந்தக் கடிதத்தில் உள்ள கோரிக்கை, ‘ஏற்கனவே விவசாயப் பெருமக்கள் கடுமையாக எதிர்த்துப் பல மாதங்களாகப் போராடும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசிடம் எதையும் கேட்கவில்லை’ என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மாநிலத்தின் உரிமைகளை, ஒவ்வொன்றாகத் தாரை வார்த்து மத்திய அரசின் திட்டங்களையெல்லாம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறதோ, அதேபோல், இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல வாக்குறுதியிலும் பரிதவிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக விவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி,  ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பது  மிகுந்த வேதனையளிக்கிறது.திமுகவை பொறுத்தவரை, ‘அதிமுக அரசும்-பா.ஜ.க. அரசும்’  காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான  ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்து விட்டு ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல’ அறிவிப்பிற்கான சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Gandhian Non-Cooperation Movement Against National Population Registry Gandhian Non-Cooperation Movement Against National Population Registry , National Population Record, Gandhi, Non-Cooperation Movement
× RELATED திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை...