கைதி மனைவியுடன் அதிகாரிகள் தொடர்பு சிறைகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்திய டிஐஜி இடமாற்றம்

சேலம்: தமிழக சிறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்திய தலைமையிடத்து டிஐஜி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்கள், மோசடிகள், கைதிகளின் மனைவிகளுடன் சிறை அதிகாரிகள் கள்ளத்தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகளை கூறி சிறைத்துறை தலைமையிடத்து டிஐஜி கனகராஜ், கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பான சுற்றறிக்கை ஒன்றை மத்திய, மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் வெளியே கசிந்தது. சிறை அதிகாரி ஒருவரே சிறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மத்திய சிறை சூப்பிரண்டுகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஊழலை அம்பலப்படுத்திய  டிஐஜி கனகராஜ் திடீரென திருச்சி சரக சிறைத்துறை டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த டிஐஜி சண்முகசுந்தரம் கோவை சரக சிறைத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார். இதேபோல் சென்னை சரக டிஐஜி முருகேசனுக்கு, தலைமையிடத்து டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறையில் நடைபெறும் மோசடிகள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில்தான் தெரிவிக்கப்படும். ஆனால் டிஐஜி சுற்றறிக்கையாக அனுப்பியதால் அந்த அறிக்கை முழுவதுமாக வெளியே கசிந்து விட்டது. இதனால் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதன்காரணமாகவே அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார், என்றனர்.

Related Stories: