×

கொரோனாவால் தட்டுப்பாடு ஏற்படும் அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்: பதுக்கலை கண்காணிக்க நிபுணர்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரசால் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தில் உள்ள 12 அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பட்டியலிட்டுள்ள நிபுணர்கள் குழு, பதுக்கலை தடுக்க கண்காணிப்பு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட துறைகளில் மருந்து துறையும் ஒன்று. கொரோனா வைரசால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் மருந்து உற்பத்திக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.  சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், வலி நிவாரணி மற்றும் காய்ச்சல், தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் வரும் 20ம் தேதி வரைதான் இருப்பு உள்ளன. இதே நிலை நீடித்தால், இந்த மருந்துகளின் வலை உயரவும் வாய்ப்புகள் உள்ளன’ என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரசால் இந்திய மருந்து துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, கொரோனா வைரசால் இந்திய மருந்து துறையில் தட்டுப்பாடு ஏற்படும் மருந்துகளை பட்டியலிட்டுள்ளது.  இதன்படி, குளோராம்பெனிகால், நியோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகள், காது, தொண்டை பாதிப்பு, நிமோனியா மருந்துகள், விட்டமின் பி1, பி2. பி6, கர்ப்பகாலத்தில் உட்கொள்ளப்படும் ஹார்மோன் மருந்துகள், மாதவிடாய் பிரச்னைகளுக்கான மருந்துகள் உட்பட 12 அத்தியாவசிய மருந்துகளை தடை செய்ய வேண்டும் என இந்தக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும், மேற்கண்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் ஆபத்து உள்ளதால் இந்த மருந்துகள் பதுக்கப்படுவதை தடுக்க விற்பனையாளர்கள், ஸ்டாக்சிஸ்டுகள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விலை உயர்வதை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட மருந்துகள் மற்றும் மருந்து கலவைகள் அடங்கிய எந்த ஒரு மருந்துகளுக்கும் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து குழு நிபுணர்கள் சிலர் கூறியதாவது; சீனாவில் ஹூபே மற்றும் ஹாண்டாங் ஆகிய மாகாணங்களில் இருந்து மட்டும் 20 முதல் 25 சதவீத மருந்து மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த மகாணங்களில் மட்டும் மேலும் 15 நாட்களுக்கு நிறுவனங்கள் மூடப்பட்டால், இதை நம்பியுள்ள இந்தியாவிலும் மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மேற்கண்ட மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் மருந்து பொருட்களை முழுமையாக சார்ந்துள்ள 12 மருந்துகளை தடை செய்வதற்குதான் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என்றனர்.



Tags : government ,panel ,experts , coronavirus , Central government, experts , monitor hoarding
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...