திருமங்கலத்தில் தொடர் கைவரிசை வடமாநில கொள்ளையன் சிக்கினான்: 20 பவுன், பைக் பறிமுதல்

அண்ணாநகர்:  திருமங்கலம் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர், அரும்பாக்கம், திருமங்கலம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் தனியாக நடந்த செல்பவர்களிடம் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வரும் ஆசாமி ஒருவர், தனியாக நடந்து செல்பவர்களை நோட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, ஒரே நபர்தான் தொடர்ச்சியாக பல இடங்களில் கைவரிசை காட்டியது உறுதி செய்யப்பட்டது. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். இதனால் அந்த வாலிபர், பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அமோல் சாகிப் ஹிண்டே (29) என்பதும், இவர் மீது செயின் மற்றும் செல்போன் பறிப்பு, வழிப்பறி கொள்ளை என ஆந்திராவில் 34 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்தபோது 2016-17ம் ஆண்டுகளில் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டவர். கடந்த 2019ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து ஒரு பைக்கை திருடிக்கொண்டு, சென்னை அண்ணாநகருக்கு வந்துள்ளார். இங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து செயின் மற்றும் செல்போன் பறிப்பு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: