×

தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினர் 3 பேர் பலி: 20 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

திருமலை: தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினர் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். இவர்களது சடலம் அழுகிய நிலையில் 20 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், கண்ணேறுவரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் பைக்கில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் காக்கித்தியா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த கரீம்நகர் போலீசார் விரைந்து வந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை பிரதீப் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது மனைவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கால்வாயில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டு இருந்ததால் அவரது மனைவியை தேடுவதற்காக கால்வாயில் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அலகனூர் அருகே கால்வாயில் கார் ஒன்று சிக்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். காரில் 3 சடலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, கரீம்நகர் போலீஸ் ஆணையாளர் கமலஹாசன் தலைமையிலான குழுவினர் வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கால்வாயில் கார் விழுந்து இருப்பதும் அதில் 3 பேரின் சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கார் பதிவு எண்ணை கொண்டு விசாரணை செய்ததில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கரீம்நகரை சேர்ந்த உர வியாபாரி சத்தியநாராயணா (55), அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ராதா (50). இவர்களது மகள் பல் மருத்துவக் கல்லூரி மாணவி வினை என்பதும்,  ராதா, பெத்தபல்லி எம்எல்ஏ மனோகரின் உடன் பிறந்த சகோதரி எனவும் தெரிந்தது.

கடந்த 27ம் தேதி இவர்கள் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளனர். இதனால் 20 நாட்களுக்கு முன்பு இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும் இவர்கள் காணாமல் போனதாக புகார் எதுவும் வந்துள்ளதா என்று தெரியாத நிலையில் போலீசார் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி நிகிதபன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து தகவலறிந்த பெத்தபல்லி எம்எல்ஏ மனோகரன், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.


Tags : MLA ,sister ,car accident ,Telangana Telangana , Telangana, car accident, sister of MLA, 3 killed
× RELATED இனுங்கூரில் 100 ஆண்டு பழமையான கட்டளை...