×

டெல்லி வந்த இங்கிலாந்து எம்.பி துபாய் திருப்பி அனுப்பப்பட்டார்: காஷ்மீர் விஷயத்தில் தலையிட்டதால் நடவடிக்கை?

புதுடெல்லி: டெல்லி வந்த இங்கிலாந்து எம்.பி டெப்பி ஆப்ரகாமின், இ-விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் வந்த துபாய் விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி எம்.பி டெப்பி ஆப்ரகாம். இவர் டெல்லியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றம் நண்பர்களை பார்க்க நேற்று டெல்லி வந்தார். துபாயிலிருந்து டெல்லி வந்த அவரின் விசாவை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், அது ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். எதற்காக விசா ரத்து செய்யப்பட்டது என்ற காரணமும் கூறப்படவில்லை. இதுகுறித்து தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என டெப்பி வாதிட்டார். ஆனாலும் அவர் வந்த விமானத்திலேயே துபாய் திருப்பி அனுப்பப்பட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, இங்கிலாந்து எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் கடிதம் கொடுத்தனர். அந்த எம்.பி.க்கள் குழு கூட்டத்துக்கு டெப்பி ஆப்ரகாம்தான் தலைமை தாங்கினார்.
இவர் இந்தியா வருவதற்கு கடந்த அக்டோபர் மாதமே விசா பெற்றிருந்தார். அந்த விசா இந்தாண்டு அக்டோபர் வரை செல்லுபடியாகும். ஆனால், அந்த விசா சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை அறியாமல் அவர் டெல்லி வந்துள்ளார். இதுகுறித்து டெப்பி கூறுகையில், ‘‘கடந்த 13ம் தேதிக்கு முன்பாக, விசா ரத்து செய்யப்பட்ட இ-மெயில் தனக்கு அனுப்பப்படவில்லை. அதன் பின்பு நான் பயணத்தில் இருந்தேன். டெல்லி வந்த பின்பு தான் தனது விசா ரத்து செய்யப்பட்டதாக குடியுரிமை அதிகாரிகள் கூறினர்’’ என்றார்.  காஷ்மீர் விஷயத்தில் அவர் தலையிட்டதே விசா ரத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

Tags : UK ,Delhi ,Kashmir ,Dubai , Sent , Delhi, UK MP, Dubai
× RELATED புதிய தேர்தல் ஆணையர்களாக...