ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டர் கைது : முகநூலில் வீடியோ வெளியாகி பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து சென்ற பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி முகநூலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து மங்களூரு மாவட்டம் புத்தூரை நோக்கி சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்சில் இளம் பெண் ஒருவர் பயணித்தார். பெண்கள் இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். இந்நிலையில் அனைவருக்கும் டிக்கெட் வினியோகம் செய்த கண்டக்டர், இளம்பெண் அருகே வந்து அமர்ந்துள்ளார். சிறிது நேரம் அமைதியாக இருந்த கண்டக்டர்,  பெண்ணிடம் தனது சித்து வேலையை காண்பிக்க தொடங்கினார். கைகள் இரட்டையும் கட்டிக்கொண்டு, பக்கவாட்டில் பெண்ணிடம் ரகசியமாக சில்மிஷம் செய்துள்ளார். இதை அந்த பெண் தடுக்க முயற்சித்தார். ஆனால் கண்டக்டர்  விடவில்லை. பெண்ணின் கையை தள்ளிவிட்டு, மீண்டும் பாலியல் சில்மிஷம் செய்தார். இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பெண், கண்டக்டரின் சேட்டையை  தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை கண்டக்டர்  கவனிக்கவில்லை.

பஸ் சிறிது தூரம் சென்றதும், வாகனத்தை நிறுத்தும்படி கூறிய பெண், கண்டக்டரிடம்  தகராறில் ஈடுபட்டார். சில்மிஷம் செய்ததாக பெண் தன் மீது கூறிய குற்றச்சாட்டை கண்டக்டர் மறுத்து வாக்குவாதம் செய்தார். இறுதியாக அந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை காண்பித்தபோது, கண்டக்டர் நிலை குலைந்து போய்விட்டார். கண்டக்டரை திட்டியபடியே கீழே இறங்கிய அந்த பெண், நேற்று இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பெங்களூருவில் இருந்து புத்தூரை நோக்கி சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் கண்டக்டர் சிசுஹரி சாலூர் என்பவர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். பல முறை அவரின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் அவர் விடவில்லை. தடுக்க நினைத்த என் கையை மீறி அவரின் செயல்பாடு இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கண்டக்டர் சிசுஹரி சாலூர் மீது கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த தகவல்கள் கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியவந்ததும், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கண்டக்டரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: