கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக துணை முதல்வர் லட்சுமண் சவதி தேர்வு : வாக்கெடுப்பில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கு நேற்று நடந்த தேர்தலில் துணை முதல்வர் லட்சுமண் சவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்கெடுப்பில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. கர்நாடக சட்டப் பேரவையில் இருந்து மேலவை உறுப்பினராக ரிஸ்வான் அர்ஷத் கடந்த 2016 ஜூன் 14ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகள் பதவியில் இருந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றதை தொடர்ந்து ேமலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக இருந்த அந்த ஒரு இடத்திற்கு பிப்ரவரி 17ம் தேதி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30ம் தேதி தொடங்கி பிப்ரவரி 6ம் தேதி முடிந்தது. பாஜ சார்பில் துணை முதல்வர் லட்சுமண்சவதி, மஜத ஆதரவில் சுயேட்சையாக அனில்குமார் மற்றும் தேர்தல் மன்னர் என்று போற்றப்படும் பத்மராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையின் போது பத்மராஜனின் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜ வேட்பாளராக லட்சுமண் சவதியும்,  சுயேட்சையாக அனில்குமாரும் களத்தில் இருந்ததால் திட்டமிட்டபடி நேற்று தேர்தல் நடந்தது. சட்டப்பேரவை செயலாளர் விசாலாட்சி மேற்பார்வையில் நடந்த தேர்தலில் முதல்வர் எடியூரப்பா உள்பட பாஜ அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் வாக்களித்தனர். மஜதவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மாலை 4 மணிக்கு வாக்கு பதிவு முடிந்த பின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் 113  வாக்குகள் பெற்று லட்சுமண்சவதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியும் பேரவை செயலாளருமான விசாலாட்சி தெரிவித்தார். மேலவை தேர்தலில் வெற்றி பெற்ற சவதிக்கு முதல்வர் எடியூரப்பா, மாநில அமைச்சர்கள், பாஜ எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

கிடைத்த வாக்குகள்

தேர்தலில் மொத்தம் 120 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் லட்சுமண் சவதிக்கு கிடைத்த 113 வாக்குகள் நீங்கலாக இதர 7 வாக்குகள் செல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 7 வாக்குகளை பதிவு செய்தது யார் என்பது தெரியவில்லை

Related Stories: