உத்தரப்பிரதேசம் அடுத்த இலக்கு வரும் 23ம் தேதி தொடங்கி ஒரு மாதம் உறுப்பினர் சேர்க்கை : அகல கால் விரிக்கும் ஆம் ஆத்மி

புதுடெல்லி: கட்சியை உத்தரப்பிரதேசத்தில் வலுப்படுத்தும் நோக்கத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாஜவின் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி 2வது முறையாக இமாலய சாதனை படைத்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை தொடங்கப்படும் என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறியுள்ளார். இது பற்றி உத்தரபிரதேச மாநில ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளர் சஞ்சய் சிங் கூறியிருப்பது: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய வளர்ச்சி மாடல், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஏற்பட வேண்டும். எனவே, அம்மாநிலத்தில் வரும் 23ம் தேதி தொடங்கி ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை துவங்கும். ஒரு மாத காலம் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மார்ச் 23ல் முடிவடையும். ஆம் ஆத்மி கட்சியை விரும்பும் வாக்காளர் வயதுடைய யார் வேண்டுமானாலும், கட்சியின் மாநில கிளை மற்றும் மாவட்ட கிளைகளுக்கு நேரில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். அல்லது செல்போனில் ஒரு ‘மிஸ்டு கால்’ கொடுத்தும், ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பாக ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 எண்ணிக்கை என்ற அளவில் மாநிலம் முழுவதும் 20 லட்சம் பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டப்படும். அதில் டெல்லி மாடல் வளர்ச்சி பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், இம்ரான் ஹ்சைன் உள்பட டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்களில் டஜனுக்கும் அதிகமானோர் உத்தரப்பிரதேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள். எனவே அங்கு கட்சியை பலப்படுத்துவது எளிதாக இருக்கும். மேற்படி தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் கெஜ்ரிவால் மாடல் வளர்ச்சி பற்றி தீவிர விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால், அம்மாநிலத்தின் 403 சட்டசபை தொகுதிகளிலும் இப்போது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெறும்.

சிறுமிகள் பலாத்காரம், இலவச மதிய உணவு என்ற பெயரில் பள்ளி சிறுவர்களுக்கு ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கியது, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகரிப்பது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. மொத்தத்தில் உத்தரப்பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் நோயில் வீழ்த்தி உள்ளார். மக்கள் அங்கு வெறுப்பில் உள்ளனர். வெறுப்பு அரசியல் பணிக்கு ஆகாது என டெல்லி தேர்தல் உணர்த்தி உள்ளது. திறமையான கல்வி, சீரான ஆரோக்கியம், மலிவு விலையில் மின்சாரம், குடிநீர் என சாமான்ய மக்களின் குறையை தீர்ப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

Related Stories: