சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து 154 பிரபலங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்: கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

புதுடெல்லி: சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி எதிர்ப்பு போராட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரி, நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 154 பிரபலங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 11 உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், 24 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், 11 முன்னாள் அயல்நாட்டு பணி அதிகாரிகள், 16 ஓய்வுபெற்ற ஐபிஎஸ், 18 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 154 பிரபலங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: சிஏஏ மற்றும் என்பிஆர், என்ஆர்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்கள், நாட்டிற்கு தீங்கு இழைக்கும் தவறான எண்ணத்துடன், உள்நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த போராட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்படுவதன் மூலம், வன்முறை தூண்டப்பட்டு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுகின்றன. இது மேம்போக்காக அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடுவதுபோல தோன்றினாலும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. இதன் மூலம் அந்நிய நாடுகள் கலகத்தை ஏற்படுத்துகின்றனவோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: