சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மத்திய அரசுக்கு பணிந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் முஸ்லிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும் சட்டப்பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசியதாவது: குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை, உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தோம். கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும், இது ஆய்வில் உள்ளதாக சொன்னீர்கள். இந்த கூட்டத் தொடரிலும் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம். மற்ற மாநிலங்களைப் போல், இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்.

 தமிழகத்தில் அமைதியாக அற வழியில் இந்தப் போராட்டங்கள் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை.

ஆனால் அவர்கள் மீது தடியடி நடத்துவதற்காக காவல்துறையினரை தூண்டி விட்டது யார்?. அதனால்தான் இந்த வன்முறை சம்பவம் அரங்கேறியது. போராட்டக்காரர்களை, முதல்வர் நேரில் அழைத்து பேசி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.  குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரித்தான் இந்தப் போராட்டமே நடந்து வருகிறது. மேலும் நாங்களும் 2 கோடி பேரிடம் கையெழுத்துப் பெற்று அதை விமானம் மூலம் டெல்லி கொண்டு சென்றிருக்கிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்பிக்கள் அதை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதேபோன்று என்பிஆர்ரை தமிழகத்தில் நடத்த மாட்டோம் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்க ேவண்டும். வழக்கமான கணக்கெடுப்பு நடத்த, எந்தவித பிரச்னையும் இல்லை. இஸ்லாமியர்களை துன்பப்படுத்தக்கூடிய என்பிஆருக்கு அனுமதியில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சபாநாயகர் தனபால்: கடந்த கூட்டத் தொடரிலேயே பதில் அளித்து விட்டேன். இது  சம்பந்தமாக இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்க அனுமதியில்லை என்றும் கூறிவிட்டேன். வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டுமே பேச அனுமதிக்கிறேன்.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): சட்ட திருத்தத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தால், எந்த பாதிப்பும் இந்த அரசுக்கு வராது. அரசுக்கு நல்ல பெயர்தான் கிடைக்கும். இந்தப் போராட்டத்தை எளிதாக எண்ணிவிடக்கூடாது. அபுபக்கர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்): எங்கள் வேதனைகளை தெரிந்து கொண்டு, நல்லிணக்கத்தை பேண வேண்டும். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஏராளமானோர் பாதிக்கக் கூடிய சட்டம். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியதற்கான சூழலை, ஏற்படுத்திய அதிகாரி யார்?ஆஸ்டின் (திமுக): மறுக்கப்பட்ட ஒரு பொருளை, திரும்ப கொண்டு வரக்கூடாது என்ற விதி இல்லை.

173(உ) விதியின்படி விவாதிக்கப்பட்ட ஒரு பொருள் பற்றி பேசக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் விவாதிக்கப்படாத ஒரு பொருளை விவாதிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எனவே இதை விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.  சபாநாயகர்: ஒரு தீர்மானத்தை கொடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் சபாநாயகரின் முடிவு. துரைமுருகன் (எதிர்க்கட்சித் துணை தலைவர்): விவாதிக்கப்பட்ட ஒரு பொருள் குறித்து, விவாதம் எழுப்பக் கூடாது. ஆனால் இந்தப் பொருள் பற்றி, விவாதமே நடத்தவில்லை.

அதனால் அதைப் பற்றி பேசலாம். சபாநாயகர்: ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தீர்கள். அதை ஆய்வு செய்து நீங்கள் கொடுத்த தீர்மானத்தை ஏற்க முடியாது என்பது குறித்து உங்களுக்கு கடிதம் கொடுத்துவிட்டேன். எனவே மேற்கொண்டு அதுபற்றி விவாதிக்க அனுமதிக்க முடியாது.

 தமிமுன் அன்சாரி (மமஜக): வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான தாக்குதல் நியாயமா, இந்தப் பிரச்னையை கவனமான முறையில் அனுகியிருக்க வேண்டும். தடுப்பு அரண்களை அகற்ற சொல்லி காவலர்களை உள்ளே செல்ல அனுமதித்தது யார், சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் தொடரத்தான் செய்யும்.  அதன்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.  மு.க.ஸ்டாலின்: முதல்வரின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏற்கனவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த கேட்டால், அது ஆய்வில் உள்ளது என்கிறீர்கள். இப்போது கொடுத்த தீர்மானத்துக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை.

 எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வராததை வன்மையாக கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், மமஜக தமிமுன் அன்சாரியும் இதே கோரிக்கையை வைத்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: