×

சென்னை பள்ளிகளுக்கான சத்துணவு திட்டம் இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைப்பு: வைகோ கண்டனம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில் காலை சத்துணவு கொடுக்கும் திட்டத்தை இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5,785 மாணவர்களுக்கு மட்டும், காலை சத்துணவு கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நேற்று துவக்கி இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு அடிமை அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேல். இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முன்அறிவிப்பும் வெளியிடவில்லை. வேறு அமைப்புகள் விண்ணப்பம் தர எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. யாருடைய கட்டாயத்திற்கோ எடப்பாடி அரசு அடிபணிந்து இருக்கின்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 கோடி நிதி அளித்து இருக்கின்றார். இவ்வாறு அரசுப்பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா?

லட்சக்கணக்கான சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற சத்துணவுத் திட்டத்தை, முழுமையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம். தமிழ்நாட்டில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. இஸ்கான் அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். முன்னேறிய நாடுகளிள், பள்ளி மாணவர்களுக்கு இறைச்சியும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், இந்த அமைப்பு, தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படும். எனவே, இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது; மனுதர்ம சத்துணவுத் திட்டம் ஆகி விடும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்க்கின்றேன். மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Schools Nutrition Program ,Hindutva Organization ,Vaiko ,Vaiko Condemnation ,Chennai Schools , Nutrition Program , Chennai Schools, Hindutva Organization, Handover, Vaiko Condemnation
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...