காவேரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற ஒப்புதல்?: முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. சேலம் அருகே தலைவாசல் பெரியேரியில், ரூ.1000 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி  பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா கடந்த 9-ம் தேதி நடந்தது. திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, விவசாய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்பதே, இந்த அரசின் நோக்கம். எனவே, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அனைத்தும்  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.

இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அவர்களின் உள்ளக்குமுறலுக்கு செவிசாய்த்து, உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து தனிச்சட்டம்  இயற்றப்படும். இனி விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் டெல்டா மாவட்டங்களில் வராது. அதற்கு இந்த அரசு அனுமதி வழங்காது. வேளாண்துறை சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மட்டுமே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்  செயல்படுத்தப்படும் என்று இந்த விழாவில் உறுதியளிப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் வரவேற்பு மற்றும் வாழ்த்துகள்  தெரிவித்தனர்.

இந்நிலையில், நாளை மறுநாள் 19-ம் தேதி புதன் கிழமை மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் சிறப்பு வேளாண்  மண்டலமாக அறிவிப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள், விவசாய பிரச்சனைகள், அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்பு, 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட  முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிகழ்ந்து வரும் பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Related Stories: