சேதுபாவாசத்திரம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அரியவகை கடற்பசு

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகம் அருகே நேற்று மாலை அரியவகை கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து இப்பகுதி மீனவர்கள் பட்டுக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ், கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர் கோபால், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அங்கு சென்று, இறந்து கிடந்த அரிய வகை கடல்பசுவை மீட்டனர்.

அந்த கடல்பசு சுமார் 7 அடி நீளமும், 250 கிலோ எடையும் உள்ள பெண் கடல் பசுவாகும். இது எப்படி இறந்தது எனத் தெரியவில்லை. பின்னர் கால்நடைத்துறை டாக்டர் மலையப்பன் உடற்கூறாய்வு செய்தார். பின்னர் அந்த கடல்பசு கடற்கரையில் ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி உயிர்க்கோள பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான கடல்பசுவை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. தவறி மீனவர்கள் வலையில் பிடிபடும் கடல்பசுவை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விட்டு விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: