×

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த 10 கண்காணிப்பு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!

பெங்களூர் : நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வரும் ஆண்டில் 10 கண்காணிப்பு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளி துறையின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2020 மார்ச் மாதம் முதல் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ள செயற்கை கோள்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கான செயற்கை கோள்களுக்கு இஸ்ரோ முக்கியத்துவம் அளித்துவந்த நிலையில், அடுத்த நிதியாண்டில் 10 கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எல்லையோர பயங்கரவாதம் குறித்து முன்கூட்டியே அறிய, இஸ்ரோ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இமுதல்கட்டமாக ஜிஅய்சாட்- 1 மார்ச் மாதமும், ஜிஅய்சாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி, 10 தேசிய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், 18 தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் எட்டு வழிசெலுத்தல் செயற்கைக்கோள்கள் நமது தேசத்திற்கு சேவை புரிந்து வருகின்றன. ஒளிபரப்பு, தொலைபேசி, இணைய சேவைகள், வானிலை முன்னறிவிப்பு, பாதுகாப்பு, பேரழிவு மேலாண்மை மற்றும் பல துறைகளின் கீழ் மேற்கூறிய செயற்கைகோள்கள் சேவை புரிகின்றன. இதனிடையே இஸ்ரோவின் அடுத்த 36 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த மத்திய நிதி அமைச்சகம் ரூ .13,480 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Country ,ISRO , Space Department, Report, ISRO, Surveillance, Satellite
× RELATED சுய ஊரடங்கை ஒட்டி வெறிச்சோடியானது நாட்டின் முக்கிய நகரங்கள்