சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்துவதில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள் : ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி ஷாகீன் பாகில் போராடுவதற்கு உரிமை உண்டு என்றாலும் அதற்காக சாலையை மறிப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஷாகீன் பாகில் ஆயிரக்கணக்கானோர் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில், போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் போக்குவரத்தை யாரும் தடுக்கக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியின் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியில் இச்சட்டத்துக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 4 மாத குழந்தையுடன் ஒரு இளம்பெண் கலந்து கொண்டார். இதில் கடுங்குளிரில் போராட்டத்தில் கலந்து கொண்டதால், இரவில் வீடு திரும்பும்போது, அந்த குழந்தை ஜன்னி கண்டு இறந்தது.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் என்பவரும், வக்கீல் அமித்ஷானி என்பவரும் தனித்தனியாக இந்த போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘போராட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. ஆனால், மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது. பொது இடம் ஒன்றில் இப்படி நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தக்கூடாது. அப்படி நடத்த வேண்டும் என்றால், தனி இடத்தில் வைத்து போராட்டத்தை மேற்கொள்ளலாம்’’ என்றனர்.

பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, டெல்லி ஷாகீன்பாகில் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்துவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.  அத்துடன் ஜனநாயக முறையில் போராட அனுமதி உண்டு என்றாலும் அதற்கு எல்லை உண்டு என்று நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது, ஆனால் போக்குவரத்தை யாரும் தடுக்கக் கூடாது என்றுஅறிவுறுத்திய நீதிபதிகள், 60 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் ஆணையர், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சத்னா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவையும் நீதிமன்றம் நியமித்துள்ளது. போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை அளிக்க உள்ளது.

Related Stories: