×

மாணவர்களை போலீசார் தாக்கும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் விளக்கம்!

புதுடெல்லி: மாணவர்களை போலீசார் தாக்கும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிச.15ம் தேதி, டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழத்தின் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி, அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். வளாகத்திற்குள் போராட்டத்தின்போது தீ மற்றும் வன்முறையில் ஈடுபட்ட ஆட்களை தேடும்போது, போலீசார் அங்குள்ள நூலகத்திற்குள்ளும் திடீரென நுழைந்தனர்.

நூலகத்தில் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலீசார் லத்தியால் தாக்குதல் நடத்தினர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட போலீசார் முகமூடி அணிந்திருந்தனர். அதனால், அவர்கள் முக அடையாளங்கள் தெரியவில்லை. மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு, நாடு முழுவதும் கடும் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், போலீசார் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போராட்டம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு இக்காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருங்கிணைப்பு குழு இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பு குழு இந்த வீடியோவின் நகலை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கி உள்ளது. இதற்கிடையே மாணவர்களை போலீசார் தாக்கும் இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என்று டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிசிடிவி காட்சிகளை தங்கள் தரப்பில் வெளியிடவில்லை எனவும், சமூக வலைதளங்களில் பல்கலைக்கழகம் பெயரில் பல்வேறு கணக்குகள் உள்ளதாகவும், போராட்டத்தை தூண்ட அதனை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டதாக கருதக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : Delhi Jamia Melia University Explanation ,Delhi Jamia Milia University , Jamia Milia, Students, Cops, Assault Video, Delhi
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...