டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக திமுக தரப்பில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக திமுக தரப்பில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி, தேர்வினை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சொப்னா என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இதன்படி இந்த வழக்கின் விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொய்யப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், விசாரணையானது நியாயமாக இருக்காது. இதில் அரசு அதிகாரிகளே முறைகேடு மூலமாக பணிக்கு வந்தால், எவ்வாறு ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று சாடினார். அச்சமயம் திமுக தரப்பில் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு ஒரு இடையீட்டு மனுதாக்கல் செய்யவிருப்பதாகவும், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வாதித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 65 பேர் ஒரு குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையத்தில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது.

தற்போது 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு 4வது விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த அரசுக்கு சாதகமாக அறிக்கை அளிக்கவே முயற்சி மேற்கொள்கிறார். அதுமட்டுமின்றி இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் வெளிமாநிலத்தில் அச்சிடப்பட்டு கொண்டு வருகின்ற காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுசம்பந்தமாக விரைவில் மனுதாக்கல் செய்யவிருப்பதாகவும், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் நீதிபதிகள் முன்பு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் திமுக தரப்பில் தாக்கல் செய்யக்கூடிய இடையீட்டு மனு மீதான ஒருமுடிவை நீதிபதிகள் எடுக்கவுள்ளனர்.

Related Stories: