விமான நிலையத்தை சுற்றிலும் இறைச்சி கழிவு வீச்சு எதிரொலி : சென்னை விமானங்களுக்கு பறவைகளால் அச்சுறுத்தல்

சென்னை : சென்னை வந்து செல்லும் சில விமானங்களுக்கு பறவைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. விமான நிலையத்தை சுற்றிலும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதே இதற்கு காரணம். அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு விமான நிலையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பறவைகள் மோதி விமானங்கள் சேதம் அடைவது என்பது தொடர்கதையான ஒன்று. கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்புத் துறை குட்டி விமானம் ஒன்று பறவை மோதி, வெடித்து சிதறிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு மீனப்பாக்கம் விமான நிலையமும் தப்பவில்லை. இங்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. ஓடுபாதைகள் மட்டுமின்றி, விமானம் பறக்கும் இடங்களிலும் பறவைகள் ஊடுருவி விடுவதால் விமான இயக்கம் தடைப்படுகிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 10 சம்பவங்கள் இப்படி நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய சுற்றுசூழல் குழு ஆய்வு நடத்தியது. அப்போது விமான நிலையத்திற்குள் வெளியே குடியிருப்பு பகுதியில் தேங்கும் குப்பைகளில் அதிக அளவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதே பறவைகள் படையெடுப்புக்கு காரணம் எனத் தெரிய வந்தது.

விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள அளகாபுத்தூரில் கொட்டப்படும் குப்பையில் 80% மீன் கழிவுகள் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விமான நிலையத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1000 விமானங்களை வீழ்த்திய பறவைகள்

இந்தியா முழுவதும் நாள்தோறும் சுமார் 8000 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 3,500 விமானங்கள் ஆகும். பபறவைகள் மோதல், அளவுக்கு அதிகமான தூசி, மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்களால் தினமும் 20 முதல் 24 விமானங்களின் இயக்கம் தடைப்படுகிறது. ஆண்டுதோறும் பறவைகள் மோதலால் சராசரியாக 1000 விமானங்கள் வரை பாதிக்கப்படுகின்றன. 2017ல் 1,125 மற்றும் 2018ல் 1,244 பறவை மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: