×

தொலைத்தொடர்புத்துறைக்கு ரூ.10,000 கோடி நிலுவைத்தொகை செலுத்தியது பாரதி ஏர்டெல் : எஞ்சிய தொகையை, மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் அறிவிப்பு

டெல்லி : மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அத்துடன் எஞ்சிய தொகையை, வழக்கின் அடுத்த விசாரணை தினமான மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த கெடு:

புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. அதை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த ஜனவரி 15ம் தேதி தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 1.47 லட்சத்தை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மனு தள்ளுபடி

இதையடுத்து, கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி வோடபோன், ஏர்டெல், டாடா டெலசர்வீசஸ் நிறுவனங்கள் மனு செய்தன. இது, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பில் நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது,அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.  தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கம்பெனி இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  

ரூ.10,000 கோடி நிலுவைத் தொகை

இந்நிலையில் இன்று பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் சார்பாக மொத்தம் ரூ.10,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில்,நிறுவனத்தின் சுய மதிப்பீட்டுக் கணக்கை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை தேதிக்கு முன்னர் அல்லது விசாரணை முடிந்தவுடன் மீதமுள்ள நிலுவைத் தொகையை முறையாகச் செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்  என்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்தும் போது இதர விவரங்களையும் சமர்ப்பிப்பதாகவும் பாரதி ஏர்டெல் கூறியுள்ளது. உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம் உள்பட கிட்டத்தட்ட ரூ.35,586 கோடி நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் அரசுக்கு பாக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Bharti Airtel , Bharti Airtel, Supreme Court, Vodafone, Tata Teleservices
× RELATED நாடு முழுவதும் வருமான வரி நிலுவை...