சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பது தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காத 5 மாநிலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

டெல்லி : சமுதாய உணவுக்கூட வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதில் அளிக்காத தமிழக அரசுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ. 1 லட்சம் அபராத தொகையை செலுத்திவிட்டு ரூ.4 லட்சம் செலுத்த விலக்கு தர தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. எஞ்சிய ரூ.4 லட்சத்தை செலுத்துமாறு தமிழக அரசுக்கு என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

ஏழைகளுக்கு உணவு அளிக்கும் வகையில், பட்டினிச் சாவுகளைத் தடுப்பதற்கு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அனுன் தவான், இஷான் சிங், கஞ்சனா சிங் ஆகிய சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு ஆதரவாக கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு பதிலளிக்குமாறு மத்திய, மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிப்பு

இதில் பஞ்சாப், நாகலாந்து, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களும் அந்தமான் - நிக்கோபார், ஜம்மு - காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் அபராதத் தொகையுடன் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதன் பிறகும்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரூ. 5  லட்ச அபராதத் தொகையுடன் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டு இருந்தது.

கூடுதல் அபராதம் விதிப்பு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை இதுவரை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் அபராதத்தை நீதிபதிகள் விதித்தனர். இதுவரை பதிலே தாக்கல் செய்யாத டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிஸா, கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு அபராதத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ரூ.1 லட்சம் அபராதத் தொகையை செலுத்திவிட்டு ரூ. 4 லட்சம் செலுத்த விலக்கு தர கோரிய தமிழக அரசின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related Stories: