கந்திலி காவல் நிலைய எல்லை கிராமப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்

திருப்பத்தூர்: கந்திலி காவல் நிலைய எல்லை கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது‌. இதனை தடுக்க எஸ்பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டமாக உதயமாகி கடந்த 3 மாதமாக செயல்பட்டு வருகிறது. எஸ்பி ஆக பொறுப்பேற்ற விஜயகுமார் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கள்ளச்சாராயம், காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் அட்டகாசம் உள்ளிட்ட வழக்குகளில் மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் போலீசார் வரும் புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்,  கள்ளச்சாராயத்தை ஒழிக்க எஸ்பி, பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொண்டு மலைப்பகுதிகளில் கள்ளச் சாராய ஒழிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில். தற்போது கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதில், கந்திலி ஒன்றியம் கண்ணாலபட்டி, சின்னகசிநாயக்கன்பட்டி, குனிச்சிமோட்டூர், ஜல்லியூர், கோல்கானூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில போலீசாரின் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும், எரிசாராயம் எனப்படும் சாராயமும் இந்த பகுதியில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் எரிசாராயத்தை குடித்து குடிமகன்கள் இறந்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் அரசு மதுபானத்தையும் தாபா ஹோட்டல். பெட்டிக் கடைகளிலும் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் குடிமகன்கள் பகல், இரவு நேரங்களில் குடித்து விட்டு அரை நிர்வாணமாக சாலையோரங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் படுத்து உறங்குவதால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து கந்திலி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி எஸ்பி, கந்திலி காவல் நிலைய பகுதியில் கண்காணித்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: