குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது, சபையில் விவாதிக்கவும் கூடாது : திமுகவின் கோரிக்கைக்கு சபாநாயகர் திட்டவட்டம்

சென்னை : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் தந்துவிட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தி பேசிய நிலையில், சபாநாயகர் தனபால் இவ்வாறு பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளை சுட்டிக் காட்டி சிஏஏ பற்றி விவாதிக்க அனுமதி தர சபாநாயகர் மறுத்து விட்டார்.

சபாநாயகர் திட்டவட்ட பதில் பின்வருமாறு...  

*திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டு வர முடியாது.

*அத்துடன் திமுகவின் கடிதத்தை ஏற்பது குறித்தும், நிராகரிப்பது குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. தீர்மானம் தொடர்பாக தன்னை நிர்பந்திக்க கூடாது.

*அதே வேளையில் வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து மட்டும் சட்டப்பேரவையில் பேசலாம்.

ஸ்டாலின் ஆவேச பேச்சு..

*முன்னதாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

*அப்போது பேசிய ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

*மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் தமிழ்நாடு போர்க்களமாக மாறி வருவதாக குறிப்பிட்டார்.

*சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன் ?,அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்த போலீசை தூண்டியவர்கள் யார்  ?, அமைதியாக போராட்டம் நடத்துவோரை சந்தித்து பேச முதல்வரோ, வேறு அமைச்சரோ செல்லாதது ஏன் என்றும் ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.

*தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக அமைதியாக நடைபெறும் போராட்டத்திற்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த ஸ்டாலின், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

*குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: