×

போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர்..: சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து பேரவையில் முதல்வர் விளக்கம்

சென்னை: போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர் என்று, சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து பேரவையில் முதல்வர் விளக்கமளித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர். ஒருவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம். இதையடுத்து கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை விடுதலை செய்தது. இந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல், காலணி, தண்ணீர் பாட்டில்களை வீசினர்.

அனுமதி இல்லாமல் இரவில் திடீர் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினர். வாகனத்தில் ஏற்றப்பட்ட 80 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் முதியவர் ஒருவர் இயற்கையாகவே மரணமடைந்தார். ஆனால், இயற்கையான மரணத்தை உண்மைக்கு மாறாக திரித்து போராட்டத்தை இரவிலும் நடத்தியுள்ளனர். காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது, என முதல்வர் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில், முதல்வரின் நடவடிக்கையை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.


Tags : Protesters ,Washermanpet ,Chennai ,council , Washermanpet batons, Tamil Nadu Assembly, Chief Minister palanicami
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...