காரை வேளாண் கூட்டுறவு வங்கியில் பருத்தி ஏலம் மிகவும் குறைவான விலைக்கு கேட்டதால் விவசாயிகள் வங்கியை முற்றுகை

பாடாலூர்: காரை வேளாண் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மிகவும் குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் வங்கியை விவசாயிகள் முற்.றுகையிட்டனர். ஆலத்தூர் தாலுகா காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவதாக விவசாயிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பருத்தி 1 கிலோ ரூ 45 முதல் 55 வரை விற்பனை செய்து தரப்படும் என விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை நம்பி ஆலத்தூர் தாலுகா திம்மூர், இலுப்பைகுடி, கொளத்தூர், கொளக்காநத்தம், கூடலூர், சிறுகன்பூர், வரகுபாடி, அயனாபுரம், அனைப்பாடி, காரை, புதுக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டம் எதுமலை, சணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 57 விவசாயிகள் 555 மூட்டை பருத்தியை விற்பனை செய்வதற்கு காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் ஒவ்வொரு விவசாயின் பருத்தியையும் சாம்பிள் எடுத்து அதற்கு விலை நிர்ணயம் செய்தனர். அப்போது ஒரு கிலோ பருத்தி விலை ரூ11 முதல் 42 வரை விலை அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு பருத்தி சாகுபடி செய்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வாகனங்கள் மூலம் வாடகை கொடுத்து நல்ல விலை கிடைக்கும் என நினைத்து இங்கு கொண்டு வந்தோம் ஆனால் இங்கு மிகவும் குறைவாக 11 ரூபாய் என அடிமாட்டு விலைக்கு பருத்தியை கேட்கின்றனர். நாங்கள் என்ன செய்வது மற்ற இடத்தில் ரூபாய் 45 முதல் 55 வரை விற்பனையாகி வரும் நிலையில் இங்கு இவ்வளவு அடிமாட்டு விலைக்கு பருத்தி ஏலம் அறிவித்துள்ளது மிகவும் கேவலமாக உள்ளது. எனவே எங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதையடுத்து அதிகாரிகள் நாளை( இன்று) மறு ஏலம் நடைபெறும் என தெரிவித்தனர். இதனை ஏற்று விவசாயிகள் வங்கி முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

வியாபாரிகள் ஒப்பந்தம்

காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது என தெரிந்து வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். அதனை அறிந்த உள்ளூர் வியாபாரிகள் ஏலத்திற்கு வந்தனர். அப்போது வெளியூர் வியாபாரிகளிடம் இந்த பகுதியில் விவரம் தெரியாத மக்கள் உள்ளனர். அதனால் அதிக விலைக்கு ஏலம் கேட்க வேண்டாம் குறைந்த விலைக்கு கேளுங்கள் எனக்கூறி அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு மிகவும் குறைந்த விலைக்கு கேட்டு விட்டு சென்று விட்டனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: