நிலக்கோட்டை அருகே கண்மாய் குடிமராமத்து பணிகளில் முறைகேடு: விவசாயிகள் வேதனை

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை அருகே கண்மாய் குடி மராமத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் சென்னஞ்செட்டிய பட்டியில் திருப்பதி செட்டியார்குளம் உள்ளது. 10 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கண்மாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர். இந்த கண்மாயில் குடி மராமத்து பணிக்காக கண்மாய் நடுப்பகுதியில் உள்ள மணலை அள்ளி கரையை உயர்த்தி அகலப்படுத்த ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. ஆனால் கண்மாய் நடுவில் மண்ணை எடுக்காமல் கரையை ஒட்டியே மணலை அள்ளி கரையை உயர்த்தி முறைகேடு செய்கின்றனர்.

எனவே முறையாக பணி நடக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி அய்யாவு கூறுகையில், ‘கண்மாய் நடுவில் தூர்வாராமல் கரை அருகே சுரண்டி கரை உயர்த்துகின்றனர். இதனால் மழை காலங்களில் கண்மாய் நிரம்பிய நிலையில் கரை உடைந்து பயிர் நாசமாகும் அபாயம் உள்ளது. அரசு பணத்தை வீணடிக்காமல் முறையாக பணி நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: