திமுக உட்கட்சி தேர்தலை சுமூகமாக நடத்த மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை: திமுக தலைமை திட்டம்!

சென்னை: திமுக உட்கட்சி தேர்தல் வரும் 21ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள நிலையில் அதனை சுமூகமாக நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. திமுகவின் உட்கட்சி தேர்தல் வருகின்ற 21ம் தேதி தொடங்குகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாநகரம் என பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தலானது நடைபெறவிருக்கிறது. கடந்த முறை உட்கட்சி தேர்தல் நடைபெற்ற போது ஆங்காங்கே பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள், கட்சியினருக்குள்ளாகவே வாக்குவாதங்கள் மற்றும் அடிதடி நிகழ்வுகள் எல்லாம் ஏற்பட்ட நிலை காணப்பட்டது. இந்த முறை அதுபோன்று நிலைகள் இல்லாமல் சுமூகமான முறையில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கட்சியினர் அமைதியான முறையில் வாக்களித்து, தங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை திமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

எனவே இந்த தேர்தலை எவ்வாறு சுமூகமாக நடத்துவது என்பது குறித்த ஒரு ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது. இதில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு உட்கட்சி தேர்தலை எப்படி நடத்துவது? எந்தவிதமான முறைகளில் இந்த தேர்தலை கொண்டு செல்வது? என்பது குறித்து ஆலோசிக்கின்றனர். கிளை, நகரம், மாநகரம் என பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவரக்கூடிய தேர்தல் இறுதியாக மாநில அளவில் மற்றும் தலைவர் தேர்தலில் நிறைவுபெறும். எனவே இந்த தேர்தல் 21ம் தேதி தொடங்கினாலும் அனேகமாக டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 7, 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெறக்கூடிய இந்த தேர்தல் நடைமுறையை அமைதியான முறையில் நடத்துவதற்கு திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

Related Stories: