புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே கேட் திறப்பதில் தாமதம்

நெல்லை: நெல்லையில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையால் ரயில்வே கேட்டை ரயில் கடந்துசென்ற பிறகும் கேட் தாமதாக திறக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ள கிராசிங் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மத்திய அரசு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்காக மூலதன செலவாக ரூ,1.60 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல், தொலை தொடர்பிற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆள் இல்லா லெவல்கிராசிங், ரயில்வே மேம்பாலம் போன்ற பாதுகாப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பல நேரங்களில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பாலம் அமைக்கும் திட்டம் பல கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். இந்நிலையில் ரயில்வே கேட் மூடி திறப்பதில் ஏற்கனவே உள்ள நியதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என சமீபத்தில் ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரயில்வே கேட்டானது, ரயில்கள்  வருவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மூடப்படுகிறது. இதேபோல் ரயில் கடந்து சென்று ஒரு நிமிடம் கழித்தே திறக்கப்படுகிறது. இதற்கான சிக்னல் கிடைத்த பின்னரே கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறக்கிறார். இது போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள கேட் பகுதிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் நகர எல்லை பகுதிக்குள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் வாகனஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கூடுதல் நேரம் கேட் முன் காத்திருப்பதும் திறந்த பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீராக கூடுதல் நேரமும் ஆகிறது. அதற்குள் அடுத்த கிராசிங் ரயில் வந்தால் மீண்டும் கேட் மூடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியில் மட்டும் குலவணிகர்புரம் ரயில்வே கேட், மகாராஜநகர் உழவர் சந்தை ரயில்வே கேட்  மற்றும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் உள்ளிட்ட கிராசிங்குகளில் கேட் மூடப்பட்டு திறக்கப்படும்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல் இந்த கேட் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் பாயின்ட் டு பாயின்ட், ஒன் டு ஒன் போன்ற பஸ்களும் சரியான நேரத்தில் பயணிப்பதில் சிக்கல் நிலவுகிறது.  இந்த குளறுபடிகளுக்கு தீர்வுகாண அதிக நெரிசல் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் பாதியில் நிற்கும் மேம்பாலத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: