மக்கிய உரம் பயன்படுத்தி நெல், உளுந்து, காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தினமும் சேகரிக்கப்படும் காய்கறி, பழங்கள், மக்கும் குப்பைகளை நுண்ணிய உர சேமிப்பு மையம் மூலம் மக்கவைத்து, சளித்து பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கிய உரத்தை பெற்று சென்று பயன்படுத்திய உழவர்கள் நெல் சாகுபடி நன்றாக இருந்ததாக கூறி உள்ளனர். மேலும் அதிகம் மகசூலும் கிடைத்து உள்ளது. குறிப்பாக அம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜ்குமார் என்பவர் நெல்சாகுபடிக்கு பிறகு உளுந்து சாகுபடி செய்துள்ளதாகவும் எப்போதும் இல்லாத வகையில் உளுந்து செடி நன்கு பரவி வளர்ந்து செழிப்பாக உள்ளதாகவும் அதிக பூக்களை கொண்டுள்ளதாகவும் மேலும் மக்கிய உரம் பெற்று சென்று நெல் சாகுபடி செய்த உழவர்களிடம் நேரில் சென்று ஆய்வு செய்த போது பூச்சி தாக்குதல் குறைவாக இருந்ததாகவும் நெல் மணிகள் திரட்சியாக அதிக எடைகொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மக்கிய உரம் வழங்கும் பணியினை மேற்கொள்ளும் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், நகராட்சி மூலம் மக்கிய உரங்கள் கேட்டு பதிவு செய்த உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை நெல் மட்டுமல்லாது உளுந்து, பச்சை பயிறு, துவரை, காய்கறி பயிர்கள், வாழை,பழமரங்கள் தென்னை, எண்ணெய் வித்து பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக இடலாம்.இதில் தழை சத்து,மணி சத்து, சாம்பல் சத்து, ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் அதிக எடை கொண்டதாகவும் , சத்துமிக்கதாகவும், ரசாயன பயன் பாடில்லாத இயற்கை விவசாயத்தில் விளைந்ததாக இருக்கும். எனவே உழவர்கள் பதிவு செய்து உரத்தை பெற்று செல்லலாம் என்றார்.

Related Stories: