கிராபைட் தொழிற்சாலையில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கிராபைட் ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. கிராபைட் கனிமம் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இப்பகுதி கிராம எல்லைவரை பரவியுள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. கிரேடு வாரியாக உள்ள கிராபைட் பெயிண்ட், குருசுபுல்(தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை உருக்க பயன்படும் உலை), ராக்கெட், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் உள்ளிட்ட அதிக வெப்பநிலை தாங்கும் பொருட்கள் தயார் செய்ய பயன்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கிராபைட் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலை தொடங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்க திட்டமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு இங்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த விரிவாக்கமும் இதுவரை செய்யவில்லை. தொடக்க நிலையில் இருந்ததுபோல் தற்போதும் 200 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இந்நிலையில் தற்போது பணியாற்றுபவர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஆலை நஷ்டத்தில் இயக்குவது போல் காட்டி ஆலையை முடக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழியர்கள் கூறுகையில், அரசே நேரடியாக கனிமங்களை விற்பனை செய்யாமல், தனியாரிடம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் தற்போது ஆலை முற்றிலும் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதனால் ஊதியம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆலையை முழுமையாக செயல்படுத்தவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: