விடுமுறை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

திருவண்ணாமலை: விடுமுறை தினமான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், சென்னை மற்றும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சிவ பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று அண்ணாமலையார் கோயிலில் உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாமலையார் சன்னதியில் உள்ள சரவிளக்குகள், விளக்குகள், நாயன்மார்கள் உள்ள பகுதிகள் மற்றும்  கொடிமரங்கள், தச்சொளி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தினர். இந்நிலையில், கோடைகாலம் தொடங்க உள்ளதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர் வசதி, கோயில் வளாகத்தில் நடந்து செல்லும்போது பாதம் சுடாமல் இருக்க கூலிங் பெயிண்ட், நிழற்பந்தல் போன்றவற்றை ஏற்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: