×

கடலாடி அருகே இரண்டு வருடமாக காவிரி குடிநீர் நிறுத்தம்

சாயல்குடி: கடலாடி அருகே கண்டிலான் பஞ்சாயத்திற்கு இரண்டு வருடமாக காவிரி கூட்டு குடிநீர் வராததால், தினந்தோறும் 5 கிலோ மீட்டர் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு, சுகாதாரமற்ற தண்ணீர் பிடித்து, வருவதால் நோய்களால் அவதிப்படுவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், கண்டிலான் பஞ்சாயத்தில் கண்டிலான், விளாத்திக்கூட்டம், நெடுங்குளம், மரவெட்டி. அஞ்சதம்பல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கண்டிலான் கிராமத்தில் 250 வீடுகளும், மரவெட்டியில் 30 வீடுகளும் உள்ளன. இரண்டு ஊரிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

கண்டிலான், மரவெட்டி கிராமங்களிலுள்ள மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஒருவானேந்தல் நீரேற்றும் அறையிலிருந்து காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது, இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இக்கிராமக்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் ஆங்காங்கே குழாய்கள் பராமரிப்பின்றியும், உடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு நல்ல மழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் சேதமடைந்த குழாய்களை சீரமைக்கப்பட வில்லை. அதிக குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படாததால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வராததால் கிராமங்களில் கடும்குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள முனியன்கோயில் விலக்கு ரோடு அருகில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாய் ஏர் வால்விலிருந்து கசியும் நீரை பிடித்து வருகின்றனர். மாதக்கணக்கில் தண்ணீர் கசிந்து பெருகி, அத்தண்ணீர் கழிவுநீராக மாறி சிறு குளமாக கிடக்கிறது. கிராம மக்கள் வேறு வழியின்றி கழிவுநீரில் நின்று கொண்டு, கசியும் நீரை மணிக்கணக்கில் காத்திருந்து பிடித்து, போக, வர 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளி செல்கின்றனர். தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு செல்லும்போது, சாலையில் செல்லும் வாகனங்களால் சில இடங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது, எனவே சேதமடைந்து கிடக்கும் குழாய்களை சீரமைத்து கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கண்டிலான் பெண்கள் கூறும்போது, இரண்டு வருடமாக கண்டிலானுக்கு காவி ரிகூட்டு குடிநீர் வருவது கிடையாது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு ஊரணியில் பெருகி கிடந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். இதனால் 4 மாதம் மட்டும் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைந்தது. தற்போது ஊரணியில் தண்ணீர் குறைந்து விட்டது. இதனால் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உள்ள முனியன்கோயில் விலக்கு ரோட்டோரம் கசியும் தண்ணீரை வெயில், பனியில் காத்து கிடந்து பிடித்து வருகிறோம். அங்கே கழிவுநீருடன் கலந்து குடிநீரை பிடிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய்கள் பரவி வருகிறது.

குழாயில் பிடித்த தண்ணீர் குடங்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளி வருகிறோம். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருவதாலும், நூறுநாள் வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு செல்வதால், வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுவேலைகளை மட்டுமே பார்க்க நேரம் கிடைக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியவர்கள் காலை, மாலையில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. முதியவர்கள் தள்ளுவண்டியை தள்ளமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலையில் வரும் போது வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே கலெக்டர் கண்டிலான் கிராமத்திற்கு முனியன்கோயில் விலக்கு ரோடு அருகே செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து புதிய குழாய் இணைப்பு வழங்கி, அதிக குதிரைதிறன் கொண்ட மோட்டார் பொருத்தி, கிராமத்திலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி கிராமத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Cauvery ,drinking water station ,sea , Drinking Water
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி