வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து கண்டன பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த எம்எல்ஏ தமீமுன் அன்சாரி!

சென்னை: வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து கண்டன பதாகைகளுடன் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர். ஒருவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம். இதையடுத்து கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை விடுதலை செய்தது. இருப்பினும், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, வண்ணாரப்பேட்டையில், முஸ்லிம்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்கிறது.

சுமார் ஆயிரம் ஆண் மற்றும் பெண்கள், போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, இன்று சட்டசபை வருகை தந்தபோது, வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையுடன் வருகை தந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, தமீமுன் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே திமுக மற்றும் கருணாஸ் வழங்கிய நிலையில் தற்போது தமிமுன் அன்சாரியும் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: