×

தளவானூரில் தடுப்பணை கட்டியும் பலனில்லை: கடைகோடிக்கு தண்ணீர் வராததால் விழுப்புரம், கடலூர் விவசாயிகள் ஏமாற்றம்

விழுப்புரம்: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை வழியாக வரும் தென்பெண்ணை ஆறு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைக் கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெருக்கெடுக்கும் மழை வெள்ளநீர் பெருமளவு கடலில் கலந்து வீணாகி வருகிறது.

விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களின் வழியாக 110 கி.மீ. தொலைவு பயணிக்கும் தென்பெண்ணை ஆற்றில் திருக்கோவிலூர் அணைக்கட்டு, எல்லீஸ் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு மட்டுமே நீண்டகாலமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில் மலட்டாறு பிரிந்து செல்கிறது. ஒரு காலத்தில், தென்பெண்ணையிலிருந்து மலட்டாறில் தண்ணீர் சென்றதால் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இதனிடையே, ஆக்கிரமிப்பு அதிகரித்ததால், அதிக வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மட்டும் மலட்டாறில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ச்சியாக மணல் குவாரி அமைத்தும், திருட்டு மணல் எடுத்ததாலும், மணல் வளம் குறைந்து, ஆற்றின் உயரமும் 9 மீட்டர் அளவுக்கு சரிந்துபோனது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், மேடாகிப்போன மலட்டாறில் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், ஏமாற்றமடைந்த விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகள், தளவானூர் விவசாயி தணிகைவேல் தலைமையில், கடந்த 2017ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் பெரிய மண் தடுப்பை ஏற்படுத்தி, வாய்க்காலை சீரமைத்து மலட்டாறில் தண்ணீரைக்கொண்டு சென்றனர். எனினும், இந்த மண் தடுப்பு அரித்துச்செல்லப்பட்டதாலும், ஆற்றில் தண்ணீர் குறைந்ததாலும், மலட்டாறு வழியாக நீர் செல்வதும் ஓரிரு நாட்களிலேயே நின்றுபோனது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டினால் மட்டுமே மலட்டாறில் தண்ணீர் செல்வது சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று, விழுப்புரம், பண்ருட்டி, புதுவை பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தென்பெண்ணை- மலட்டாறு பிரியும் இடத்தில், புதிய அணைக்கட்டை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே தளவானூர் பகுதிக்கும், எதிர்புறத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் பகுதிக்கும் இடையே, தென்பெண்ணை ஆற்றில் புதிய அணைக்கட்டு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.25.35 கோடி செலவில் 400 மீட்டர் நீளம், 3.1 மீட்டர் உயரத்தில் இந்த அணைக்கட்டு பணிகள் தொடங்கி முடிந்துள்ளது. இரு கரைகளிலும் 800 மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவரும், ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து 10 அடி உயரத்துக்கு அணைக்கட்டு சுற்றுச்சுவரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டினால், தென்பெண்ணை ஆற்றில் வரும் நீர், அணைக்கட்டு வழியாக உயர்ந்து, மலட்டாறில் தண்ணீர் பாய்ந்து ஓடும். இதனால், 2,200 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதேபோல, எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் வழியாகவும் தண்ணீர் செல்லும். இந்த அணைக்கட்டின் இரு புறங்களிலும் கதவணைகள் அமைக்கப்படுவதால், தண்ணீரை தேக்கி வைத்தும், தேவையின்போது மலட்டாறு, உபரி வாய்க்கால்கள் மூலம் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளைச் சேர்ந்த 200 கிராமங்கள் நிலத்தடி நீர் உயர்ந்து பயன்பெற உள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே தடுப்பணை பணிகள் முடிவடைந்த நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான தண்ணீர் பங்கீடு, கடந்த 6ம் தேதி சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்டது. அணையில் தற்போது 97.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சாத்தனூர் அணையில் இடது மற்றும் வலது புற கால்வாய்களில் முறையே வினாடிக்கு 100 கன அடி மற்றும் விநாடிக்கு 150 கனஅடி என மொத்தம் 250 கனஅடி வீதம் 35 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனையடுத்து கடந்த 6ம் தேதி சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12,543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் குடிநீர் வசதிபெறும் என கூறப்பட்டிருந்தனர்.

அணையின் தண்ணீர் திறக்கப்பட்ட நாள் முதலே, கடைகோடி வரை தண்ணீர் வந்துசேரவேண்டுமென விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தண்ணீர் திறந்து 11 நாட்களாகியும், எல்லீஸ்சத்திரம் அணைகட்டிற்குகூட தண்ணீரவந்து சேரவில்லை. இன்னும், 10 நாட்களுக்கு திறந்தால்கூட விழுப்புரம் நகர எல்லையை தொடுவதே கஷ்டம் என்று கூறப்படுகிறது. இதனால் ரூ.25 கோடியில் தடுப்பணை கட்டியும் பயனில்லாத நிலை உள்ளது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் இனி மழையையும் எதிர்பார்க்க முடியாது. எனவே அணைக்கட்டுகளில் சேர்த்து வைத்தால்தான் நிலத்தடிநீர் உயர்ந்து விவாசய பாசனத்திற்கும், குடிநீருக்கும் உதவியாக இருக்கும். ஆனால், அணையிலிருந்து இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தளவானூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் வந்துசேறுவது சந்தேகம்தான் என்கின்றனர் விவசாயிகள். இந்த நிலை நீடித்தால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தடுப்பணையின் கடைகோடிக்கு தண்ணீர் வராததால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

விழுப்புரம் நகரத்திற்கு எல்லீஸ்சத்திரம், பில்லூர் தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நகர மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் திருக்கோவிலூர் பகுதிக்கு மட்டுமே வந்துள்ளது. விழுப்புரம் எல்லைப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேருமா என்ற சந்தேகம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடினால்தான் வறட்சிக்காலங்களில் நகரமக்களுக்கு போதிய குடிநீர் சப்ளை செய்ய முடியும். இல்லையென்றால் குடிநீருக்கும் பெரும் திண்டாட்டம் தான்.

மணல் கொள்ளையே காரணம்?

தென்பெண்ணை ஆற்றில், 1,200 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கடைகோடிக்கு தண்ணீர் வந்து சேராததற்கு பல ஆண்டுகளாக நடந்த மணல்கொள்ளையே காரணம் என்று விவசாயிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். குவாரிகள் என்ற பெயரில் 3 அடிக்கு மணல் எடுக்க அனுமதி வழங்கிவிட்டு, தரையைதொடுமளவிற்கு மணல்களை சுரண்டியதால், தற்போது தண்ணீர் திறந்துவிட்டும் கடைகோடிக்கு வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. ஆறுகளில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்துசேர பலமாதங்கள் ஆகும் என்கின்றனர்.

வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கலியவரதன் கூறுகையில், சாத்தனூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், நமது மாவட்டத்திற்கான தண்ணீர்பங்கீட்டை கேட்டு பெறுவதற்கு போராடவேண்டிய நிலை உள்ளது. தற்போது பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடை கோடிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தால்தான் முழுபலன் கிடைக்கும் என்று நாங்கள் கூறினோம். குறிப்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள தளவானூர் தடுப்பணைக்கு தண்ணீர் வந்துசேர வேண்டும். தடுப்பணை கட்டியதே, நிலத்தடிநீர்மட்டம் உயரதான். அப்போது தான் நிலத்தடிநீர்மட்டம் உயர்ந்து போர்வெல்களில் ஊற்று பெருக்கும். போதிய மழையில்லாத நிலையில், வரப்போகும் வறட்சிக்காலங்களை எப்படிசமாளிக்கப்போகிறோம். எப்படி சாகுபடி செய்யப்போகிறோம் என்ற கவலை தற்போதே எழுந்துவிட்டதாக கூறினார்.

Tags : Cuddalore ,Viluppuram ,shop , Farmers
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...