தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலும் பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அன்றுபேரவையில், 2020-21 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல்முடிந்ததும் பேரவையை 17-ம்தேதிக்கு தள்ளிவைப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை 4 நாட்கள், அதாவது பிப்.17 முதல் 20-ம்தேதிவரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2 நாள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கீட்டு தொகை தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது; பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பங்குத்தொகையாக வாங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பங்கீட்டுத் தொகை வாங்கும் முறையில் இருந்து விலக்கு அளிக்க பேரவையில் திமுக உறுப்பினர் கோரினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மலைவாழ், கிராமப்புற பள்ளிகளை தரம் உயர்த்தும்போது பொதுமக்களிடம் பங்கீட்டுத்தொகை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: