காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்துவைக்க விரும்பிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ், அவர்களின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து ஐ.நா.வில் புகார் தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்றும் அதன் முயற்சிக்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சனை குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கருத்தரங்கத்தை துவங்கி வைக்க அங்கே சென்ற ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ், செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertising
Advertising

அப்போது பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை கவலை அளிப்பதாகவும் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்கும் விதத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால், சமரசம் செய்து வைக்க தயார் என்றும் அறிவித்தார். ஆனால் அவரது கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. டெல்லியில் இது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் தான் என்பதில் இன்றும் நாளையும் எந்தவித மாற்றமும் இல்லை என்றார். ஒரு வேளை பேச வேண்டிய விஷயம் என்றால் பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஷ்மீர் பகுதியை பற்றி தான் பேச வேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மற்ற விஷயங்கள் பற்றி இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளும் என்று கூறிய ரவீஷ் குமார், 3வது நபர் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தையும் இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மனித உரிமை மீறல்களையும் தடுக்க அந்நாட்டு அரசிடம் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அறிவுறுத்துவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கருத்தை ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் தெரிவிப்பதும் அதனை இந்தியா மறுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ட்ரம்பும் கடந்த ஆண்டு இதே போல் பேசியிருந்த நிலையில், அவர் இந்தியா வரவிருக்கும் போது, மீண்டும் இப்பிரச்சனை எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: