சிஏஏவுக்கு எதிர்ப்பு, போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் தமிழகம் முழுவதும் 4-வது நாளாக போராட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியும் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பினருடன் ராயபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுப்புலட்சுமியும் கலந்துகொண்டார். அப்போது, முதல்வரிடம் கோரிக்கையை எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மதுரையில் 4-வது நாள் போராட்டம்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மகபூப்பாளையத்தில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. சி.ஏ.ஏ., மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனர்.

Related Stories: