நாளுக்கு நாள் அதிதீவிரமாக மிரட்டும் ''கொரோனா'': வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு

பீஜிங்: அண்டை நாடான சீனாவில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் வுகான் நகரில்  மட்டும், 142 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 பேர் நேற்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கே தவித்த தங்கள் நாட்டவர் 175 பேரை, நேபாள அரசு, தனிவிமானம் மூலம் மீட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும், தலைநகர் காத்மண்டுவில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,780  ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். வைரஸ் அதிகம் பரவியுள்ள ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த 6  மருத்துவர்கள்  உயிரிழந்துள்ளனர். இது தவிர, 70 ஆயிரத்து, 548 பேர், வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், மேலும், 2,048 பேருக்கு, புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: