தமிழகத்துக்கு படகுகளில் கடத்தி வந்த ரூ.6 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்: இலங்கை மீனவர் உள்பட 15 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட ₹6 கோடி மதிப்பிலான 23.5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இலங்கை மீனவர்கள் உள்பட 15 பேர் கைது  செய்யப்பட்டனர். இலங்கை, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு படகு மூலம் தமிழகத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது. கடற்படை அதிகாரிகள் யாழ்ப்பாணம் கடல் பகுதியில் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது மர்மமான முறையில் வந்த ஒரு பைபர் கிளாஸ் படகை மடக்கி சோதனையிட்டதில், அதில் 14.5 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கக் கட்டிகளுடன் படகை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 இலங்கை மீனவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: இதேபோல நேற்று  முன்தினம் மாலை காங்கேசன் துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் படகில் கடத்தி வரப்பட்ட 5.4 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தங்கம் கடத்தி வந்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், தனுஷ்கோடி கடல் பகுதி, இரண்டாம் மணல் திட்டில் இந்திய கடற்படையினரால் நேற்று முன்தினம் துரத்தி வரப்பட்ட படகில் இருந்த இலங்கை தலைமன்னாரை சேர்ந்த 3 மீனவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் கைது  செய்தனர். இவர்களின் படகும் கைப்பற்றப்பட்டது. இலங்கை மீனவர்கள் 3 பேரிடம் ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர், இதில், இலங்கையில் இருந்து படகில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தி வந்ததும்,  தனுஷ்கோடியில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை வாங்கி செல்ல படகில் வரும் நபர்களுக்காக நடுக்கடலில் காத்திருந்தபோது போலீசார் பிடித்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இலங்கை மீனவர்கள் 3 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடியில் நிறுத்தப்பட்டிருந்த படகிற்கு அழைத்து சென்றனர். படகின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை  கைப்பற்றினர். அதை பெறுவதற்காக தயாராக இருந்த 4 மீனவர்களையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் இலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு படகில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான 23.5 கிலோ தங்கக் கட்டிகள், இலங்கை மற்றும் தமிழக பாதுகாப்பு ஏஜென்சிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Stories: