கோவையில் சுற்றித்திரிந்த யானை: 8 மணி நேரத்திற்கு பின் வனத்திற்குள் விரட்டியடிப்பு

கோவை: கோவை சுந்தராபுரம், மாச்சம்பாளையம் பகுதியில் விடிய, விடிய சுற்றித்திரிந்த காட்டுயானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.  கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கிறது. இங்கிருந்து நேற்று முன்தினம் வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று மைல்கல் அருகே வந்தது. பின்னர், இரவு 2 மணி அளவில் மதுக்கரை  மார்க்கெட் ரோட்டுக்கு வந்த யானை காமராஜ்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிக்கு வந்தது. யானையை பார்த்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். இளைஞர்கள் சிலர், யானையை படம்பிடித்து சமூக வலைதளங்களில்  பரவச்செய்தனர். சிலர் யானையை விரட்டி சென்றனர்.

இதையடுத்து, பதிவாளர்காலனி, சுந்தராபுரம், மாச்சம்பாளையம், துளசிகார்டன் குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்குள்ள தோட்டத்தில் புகுந்த யானை பயிர்களை சேதப்படுத்தியது. பிறகு, குனியமுத்தூர் விஜயலட்சுமிமில்ஸ் காம்பவுன்ட் பகுதிக்குள்  பதுங்கியது.

தகவலறிந்த மதுக்கரை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கோவை-பாலக்காடு ரோட்டில் வாகனங்களை மைல்கல் அருகே நிறுத்தினர். பின்னர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், டார்ச் லைட்  அடித்தும் யானையை விரட்டினர். கோவைப்புதூரில் செல்லும்போது, போலீஸ் குடியிருப்பு காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது. பின்னர், அறிவொளி நகர் வழியாக வனத்திற்குள் நுழைந்தது. சுமார், 8 மணி நேர போராட்டத்திற்கு பின்  யானையை வனத்துறையினர் எட்டிமடை வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து மாச்சம்பாளையம் மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதிக்கு இதுவரை காட்டுயானை வந்தது இல்லை. முதல்முறையாக வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் எங்களால் தூங்கமுடியவில்லை. மீண்டும் யானை இப்பகுதிக்குள் வராமல்  இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: