×

தனியார் திட்டங்களுக்கு வங்கிக்கடன் 10 ஆண்டுகளில் 57 சதவீதம் குறைந்தது

புதுடெல்லி: தனியார் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது கடந்த 10 ஆண்டுகளில் 57 சதவீதம் சரிந்துள்ளது ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளன. அதோடு, பொருளாதார மந்தநிலை காரணமாக புதிய முதலீடுகளும் பெருகவில்லை. முதலீடுகள் மற்றும் திட்டங்களின் நிதி தேவைகளை வங்கிகள்தான் பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. கடந்த 2009-10 நிதியாண்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் சுமார் ₹4 லட்சம் கோடி. இது கடந்த 2018-19 நிதியாண்டில் 1.76 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. 2014-15 நிதியாண்டில் வங்கிகள் தனியார் நிறுவனங்களின் திட்ட முதலீடுகளுக்கு வழங்கிய கடன் ₹87,253 கோடி மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக குறைந்த பட்ச அளவாக கருதப்படுகிறது.

 கடந்த 2009-10 நிதியாண்டில் 729 திட்டங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் அனுமதி வழங்கியுள்ளன. இது 2018-19 நிதியாண்டில் 414 ஆக குறைந்து விட்டது. இதுபோல், ₹100 கோடிக்கு கீழ் முதலீடு மேற்கொள்ளப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 2009-10 நிதியாண்டில் 439 ஆக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 215ஆக குறைந்து விட்டது. ₹5,000 கோடிக்கு மேல் உள்ள பெரிய திட்டங்களின் எண்ணிக்கை 22ல் இருந்து கடந்த நிதியாண்டில் 5ஆக சரிந்து விட்டது. மாநில அளவில் கணக்கிடும்போது, ஆந்திராவில் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது கடந்த 10 ஆண்டுகளில் 73ல் இருந்து 29 ஆக சரிந்துள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 66ல் இருந்து 33ஆக குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Bank loans ,private,
× RELATED வங்கிக் கடன்களுக்கு அடுத்த 2...