கிண்டி 170வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட வசதிகள் இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆலந்தூர்: கிண்டி 170வது வார்டில் அடங்கிய மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வார்டுகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால்  கிண்டி 170வது வார்டில் அடங்கிய மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.   இதனால் பொதுமக்களுடன், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடு மற்றும் தொழில் நிறுவனம் வணிக நிறுவனங்களில் சேரும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. கிண்டி ரங்கநாதன் தெரு, சாய்பாபா கோயில் தெரு, அண்ணாசாலை சந்து, கிண்டி பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த பாதாள சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்களும், வியாபாரிகளும், தொழில் புரிவோரும் சென்னை மாநகராட்சியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.கிண்டியை  ஒட்டியுள்ள ஆலந்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கிண்டி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே விரைந்து இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் உள்ளவர்கள்  மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தியபோதும் இந்த திட்டத்தினை கொண்டு வராமல் இருப்பது விந்தையாக உள்ளது. மக்களுக்கு பெரிதும் பயனுள்ள இந்த திட்டத்தினை உடனடியாக கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக  செலுத்தியபோதும் பாதாள சாக்கடை திட்டத்தினை கொண்டு வராமல் இருப்பது விந்தையாக  உள்ளது.

Related Stories: