புழல் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் கரை பகுதி வீட்டு மனைகளாக மாற்றம்: மீண்டும் அளவீடு செய்ய கோரிக்கை

புழல்: புழல் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. இதனை அதிகாரிகள் உடனடியாக அளவீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்துகின்றனர்.சென்னை புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 300 மில்லியன் கன அடி. கிருஷ்ணா கால்வாயில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் மழைக்காலங்களில் முழு கொள்ளளவை எட்டியதும் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும். அப்போது புழல் ஏரி மதகு வழியாக செங்குன்றம் பைபாஸ் சாலை பாலம், சாமியார் மடம், பாபா நகர், வடகரை, தண்டல்கழனி, கிருஷ்ணா நகர், கிரான்ட்லைன் - புழல் இணைக்கும் பாலம், திருநீலகண்ட நகர், மேக்ரோ மார்வெல் நகர், வடபெரும்பாக்கம் - புழல் இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை பாலம் மற்றும் கொசப்பூர், ஆமுல்லைவாயில் வழியாக சடயங்குப்பம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 60 அடி அகல உபரி நீர் கால்வாய் வழியாக உபரிநீர் சென்று எண்ணூர் கடலில் வீணாக கலக்கிறது.இவ்வாறு ஒவ்வொரு மழைக்காலத்திலும் உபரிநீர் திறக்கப்படும்போது, பல ஊர்களில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதால் மக்கள் கண்ணீரில் தவிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் புழல் உபரிநீர் கால்வாய் கரைகள் பொதுப்பணித்துறை சார்பில் பலப்படுத்தப்பட்டது. தற்போது திருநீலகண்ட நகர் 5வது தெரு பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாய் கரையை உடைத்துவிட்டு அதில் வீட்டு மனைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை அறிந்த செங்குன்றம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அளவீடு செய்தனர். பின்னர், இதுதொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே இந்த இடத்துக்கு பட்டா உள்ளதாக கூறி, வீட்டுமனை அமைத்தவர்கள் மற்றும் நிலம் வாங்கியவர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக வரும் மழைக்காலத்தில் அதிகமாக மழை பெய்தால் புழல் ஏரி நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்படும். அப்போது புழல் திருநீலகண்ட நகர், தமிழன் நகர், மேக்ரோ மார்வெல் நகர் மற்றும் சக்திவேல் நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக கால்வாய் கரையை மீண்டும் அளவீடு செய்து பட்டா வழங்க தகுதியான இடமா? பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமா? என்று விளக்க வேண்டும். அதே நேரத்தில் உபரிநீர் செல்லும் கால்வாயின் கரையை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: