துரைப்பாக்கத்தில் ஆவணம் இல்லாததால் 20 பைக்குகள் பறிமுதல்

துரைப்பாக்கம்:  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போகின்றன. மேலும் திருட்டு பைக்குகளை வைத்துக்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து கண்ணகிநகர் பகுதியில் முறையான ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கண்ணகிநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆணையாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் ஆகிய  30 பேர் கொண்ட போலீசார் நேற்று அதிகாலை கண்ணகிநகர் மற்றும் எழில்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து வாகன உரிமையாளர்களை கண்டறியும் செயலி மூலம் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் முறையான ஆவணம் இல்லாமல் வீடுகளில் நிறுத்தி வைத்திருந்த 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சென்னை துரைப்பாக்கம்,  சோழிங்கநல்லூர், பெருங்குடி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாகவும், திருட்டு பைக்குகளை வைத்து கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்ணகிநகர் பகுதியில் முறையான ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற சோதனை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும்’’ என்றனர்.

Related Stories: