வாங்கிய ஒரு வாரத்தில் பழுதான பிரிட்ஜ் நிறுவனத்துக்கு 1.42 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாங்கிய ஒரு வாரத்தில் பழுதான பிரிட்ஜ் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி மோகன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ₹97,350 கொடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பிரிட்ஜ் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்தில் உள்ளே இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. மேலும், சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளே இருந்து வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, பிரிட்ஜ் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர்களும் புதிய பிரிட்ஜ்  மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளனர். இருந்தும் 2 மாதங்களாகியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

பின்னர், பிரிட்ஜை சோதனை செய்ய வந்தவர், அதனை பழுது பார்ப்பதாக கூறி, அதில் உள்ள பாகங்களை உடைத்துள்ளார்.

இதனால் முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்தநிலையில், பிரிட்ஜுக்கு செலுத்திய முழு தொகையும் திருப்பி வழங்கும் படி, சாந்தி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரிட்ஜ் தயாரிப்பு நிறுவனம், விற்பனை செய்த கடை, சர்வீஸ்

பார்த்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி. இந்த வழக்கில் பிரிட்ஜ் விற்பனை செய்த விவகாரத்தில் பிரிட்ஜ் உற்பத்தி செய்த நிறுவனம், பிரிட்ஜ் விற்பனை செய்த கடை, சர்வீஸ் பார்த்தவர்களும் மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியிருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரிட்ஜ் பழுதடைந்ததும் தெரியவந்துள்ளது. எனவே மனுதாரருக்கு மூன்று தரப்பும் சேர்ந்து பிரிட்ஜின் விலை ₹97 ஆயிரத்து 350 மற்றும் மன உளைச்சலுக்கு 45 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: